என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?


 சென்னையில் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவன் தனது இந்தி ஆசிரியையைக் கொலை செய்தது இந்தியாவையே உலுக்கிவிட்டது.  அந்தக் கொலை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

அதிர்ச்சி தரக்கூடிய இந்த நிகழ்வு ஏன் நடந்ததென கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தோமானால் -

தன் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அவன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும். தங்கள் மக்களின் அதிக மதிப்பெண்களே தமது கவுரவமாக நினைத்து குழந்தைகளைப் விளையாட விடாமலும் வேறெந்த பொழுது போக்குகளுமில்லாமலும் வீட்டிலேயே  பந்தையக் குதிரைகளை விரட்டுவது போல் விரட்டிக்கொண்டிருப்பவர்களாகத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இன்று உள்ளனர் என்பதை எவராலும் மறுக்க இயலாது. 

தன் மகனை விட எதிர் வீட்டு பையன் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிட்டாலோ...".பார் ... அவன் எவ்வளவு மார்க் வாங்கி இருக்கான்... உனக்கு வெட்கமாக இல்லையா.... அடுத்த முறை நீ முதல் மதிப்பெண் எடுக்கவில்லைஎன்றால் ....உனக்கு டிவி கிடையாது... கிரிகெட் விளையாட வெளியே போகக்கூடாது... வீட்டிலேயே உட்கார்ந்து மொத்த பாடத்தையும் படித்து முடித்துவிட்டுதான் நீ யாரிடமும் பேச வேண்டும் ... "  இப்படி இன்னும் ஏதேதோ வழிகளில் வெறும் மதிப்பெண்களுக்காக   ஒரு விதமான கொடுமை செய்பவர்களாகவே மாறிவிட்ட பெற்றோர்களே அதிகம் உள்ளனர். 

இதில் இன்னும் விசேடம் என்னவென்றால்... தன் மக்கள் சரியாகப் படிக்கவில்லை என்று பள்ளியிலிருந்து புகார் வந்துவிட்டாலோ அக்குழந்தையின் கதியோ அதோகதிதான். 

வீட்டில் இப்படி இருக்க... பள்ளியிலோ ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்த மாணவர்கள் பிடிக்காத மாணவர்கள் என்று பாகுபாட்டுடன் நடந்து கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசிரியர்களுக்குப் பிடிக்காத மாணவர்கள் என்று இருந்துவிட்டால் போதும். அவர்கள் எது செய்தாலும் அங்கு குற்றமே. 

மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் தண்டனை  , வீட்டுப்பாடம் முடிக்காமல் வந்துவிட்டாலோ கடுமையான தண்டனை.... சரியாகப் படிக்கவில்லை என்றாலோ அந்த மாணவர்களை அவர்கள் படுத்தும் பாடு ... அப்பப்பா... இதையெல்லாம் விட கொடுமை ... டியூஷனுக்கும் இவர்களிடத்திலே வரவேண்டும். அப்படி வராமல் வேறெங்காவது டியூஷனுக்குச் சென்றுவிட்டாலோ... சொல்லவும் வேண்டுமா இவர்கள் செய்யும் அட்டகாசத்தை.... 

அந்தக்காலம் போலில்லை தற்போதைய பள்ளிகளும் கல்வி முறையும் மாணவர்களின் வீட்டுச் சூழலும் வசதியும்.  இரண்டரை வயதிலிருந்து ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது.  ஒவ்வொருவருக்கும்  குழந்தைப் பருவத்திலேயே ஒருவித மன அழுத்தத்தோடுதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது இன்றைய காலத்தில். பள்ளிப்பாடம் மட்டுமா.... பள்ளியிலிருந்து வந்தவுடன்... டியூஷன் செல்ல வேண்டும்... பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் கராத்தே, கீ போர்ட் ... அது இதென்று அவர்களை உட்காரவிடாமல் விரட்டி... துவண்டுபோன கீரைத்தண்டுகளாக மாலை ஏழு  மணிக்கோ எட்டு மணிக்கோ குழந்தைகள் வீட்டிற்குத் திரும்பி வந்து பிடித்தும் பிடிக்காமலும் இரவு உணவு முடித்துவிட்டு அவர்கள் உறங்கச் செல்வார்கள்... 

நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும்... காலை 6  மணிக்கு குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பி அவர்களைத் தயார் செய்து 7  மணிக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடும் குழந்தை இரவு ஏழுமணிக்கு வீட்டிற்குத் திரும்பி வருகிறதென்றால்... பள்ளியிலும், டியூஷனிலும், மற்ற கலைப்பயிற்சிகளிலும் விரும்பிப் படித்தாலும் விரும்பாமல்   திணித்தாலும்....எப்படியாகிலும் அக்குழந்தை எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும்?

இப்டியான அழுத்தச் சூழலில் தான் இந்த மாணவன் இஸ்மாயில் தனது ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். 

இஸ்மாயில்  செயல் சரியென்று நான் கண்டிப்பாகக் கூறவில்லை. ஆசிரியை இறந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு. கண்டிப்பாக இதுபோன்ற ஒரு செயல் நடந்திருக்கக் கூடாது. மிகவும் வருத்தப்படக்கூடிய நிகழ்வுதான் இதென்றாலும்... அந்த மாணவனின் நிலையிலிருந்து நாம் யோசிக்க வேண்டும்... 

கோபத்தில் அந்த மாணவன் ஏதோ கத்தியெடுத்து குத்தினான் என்றால் ....அதீத கோபத்தில் தன்னிலை தவறி கட்டுப்பாடிழந்து அத்தவறைச் செய்துவிட்டான் என்று கொள்ளலாம். ஆனால் இவன் ஆசிரியையை பதினான்கு முறை கத்தியால் குத்தி இருக்கிறான் என்றால்... எந்த அளவுக்கு அவனுக்கு கொடுமை / மன உளைச்சல்  நிகழ்ந்திருக்குமென்று ஊகிக்க முடிகிறதல்லவா...? அதற்கு  ஆசிரியை அம்மாணவனுக்குக் கொடுத்த தொடர்ந்த மனவுளைச்சலே காரணமாகிப்போனதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  தொடர்ந்து பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கிவரச் சொல்லி  ஆசிரியை கொடுத்த புகாரினால் பெற்றோர்கள் இவனை கண்டபடி திட்டுவதும் இதற்குக் காரணம் ஆசிரியைதானே என்று இவன் மனதில் ஆசிரியை ஒரு எதிரியாக மாறியதும் தான் நடந்திருக்கிறது....இதுவே சீறும் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்தும் விட்டது.  

இன்றைய குழந்தைகள் நல்ல அறிவாளிகளாகவும் புத்திக் கூர்மையுள்ளவர்களாகவும் உள்ளனர்.  பக்குவமாகப் புரிய வைக்க அம்மாவிற்கு வீட்டில் நேரமில்லை. அவர் டிவி யில் சீரியல் பார்த்துக்கொண்டிருப்பார்... வேலைக்குச் செல்லும் அம்மாக்களோ வீட்டுக்கு வந்தவுடன் அசதியில் குழந்தைக்கு ஒரு முத்தமும் ஒரு சாக்லேட்டும் கொடுத்துவிட்டால் அவர் கடமை முடிந்துவிடுகிறது. 

இதில் குழந்தைகள் எப்படிப்படிக்கிறான் என்று கவனிப்பதோ அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை கண்காணிப்பதற்கோ நேரமில்லாமல் போய் விடுகிறது 

கல்வி என்பதே வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் ...மாணவர்களிடத்தில் அக்கறையுடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் அரிதாகவே உள்ளனர். மேற்சொன்ன கல்விமுறையே அதற்குக் காரணம்.  

இது இப்படி இருக்க... தற்போது இஸ்மாயில் ... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான். வழக்கம் போல் சாப்பிடுகிறான்,, டிவி பார்க்கிறான்... அவனை விருந்தினர் போல் நடத்துகின்றார்கள் அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென்று இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மாணவ மாணவிகள் நன்றாகப் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே  ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள் என்றால்....

  • பள்ளி ஆசிரியர் மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார்....
  • பள்ளி ஆசிரியர் மாணவிக்குக் கொடுத்த தொடர்ந்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை 
  • ஆசிரியை திட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
  • ஆசிரியர் அடித்ததால் மாணவன் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி...
  • பணம் திருடியதாகச் சந்தேகப்பட்டு மாணவியை நிர்வாணமாக்கி சோதனை செய்ததால் மாணவி தற்கொலை....

இப்படி ஒவ்வொரு வாரமும் எதாவது ஒரு செய்தி வந்துகொண்டேதான் இருக்கிறது. 

இப்படி எத்தனையோ மாணவர்களின் உயிர் போய்க்கொண்டிருக்கிறதே... அப்போதெல்லாம் ஒட்டுமொத்தமாக யாரும் குரல் கொடுக்கவில்லை. ஒரு ஆசிரியையின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைப் போல் ஒரு மாணவனின் உயிரும் மதிக்கப்படுவதில்லையே... வெறும் பெற்றோர் அழுது புலம்பி புகார் கொடுப்பார்கள்...அதையும் தாண்டி அந்த தெரு மக்களோ அவ்வூர் மக்களோ சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம்... புகார் என்று கொடுத்தாலும்... ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்பட்டு சரியான நீதியும் கிடைப்பதில்லை. அந்த ஆசிரியர்களுக்கு தண்டனையும் கிடைப்பதில்லை.... அதிகபட்சமாக ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் அல்லது அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று விடுவார்....

இப்படி மாணவர்களை அதீத மனவுளைச்சலுக்கு ஆளாக்கி மாணவர்களின் விடுபடும் உயிர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்தச் சமூகம்?

ஆசிரியை உமாவின் அகால மறைவுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு... 

இவர்களெல்லாம் கூறும்படி இஸ்மாயிலுக்கு மிகக் கடுமையான தண்டனை என்றில்லாமல்... அவனின் மனநிலையை மாற்றி...அவனைத் திருத்தி அனுப்பவேண்டியதுதான் சரியானதாகும்.

நன்றாகப் படிக்காத மாணவனை படிக்க வைக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. கண்டிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. அதேநேரத்தில் சரியாகப் படிக்கவில்லைஎன்றோ, ஒழுங்காக நடந்து கொள்ளவில்லைஎன்றோ திரும்பத் திரும்ப ஒரு மாணவனை (அதுவும் டீன் ஏஜ்) மற்ற மாணவர்கள் முன்  அவமானப்படுத்திக்கொண்டிருப்பது என்ற செயல்களிலிருந்து ஆசிரியர்கள் மாறவேண்டும். 

15  வயது இஸ்மாயில் வயதிலோ அறிவிலோ அனுபவத்திலோ முழுமை பெறாதவன். அவனால் ஒரு ஆசிரியரின் உயிர் பறிபோனது கொடூரச் செயலென்றால்... அதற்காக அம்மாணவனுக்கு மிகவும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் அது மற்ற மாணவர்களுக்குப் பாடமாக அமையுமென்று கூறுபவர்களே... 

அறிவிலும் அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்து பாடம் புகட்டக்கூடிய ஆசிரியர்களால் வாரந்தோறும் ஒரு மாணவனின் உயிர் பறிபோகிறதே.... இதற்கு என்ன தண்டனை தரப்போகிறது நமது அரசாங்கம்? இதை எப்படி தடுக்கப் போகிறது நம் சமூகம்? 


4 கருத்துகள்:

  1. ஆழமான கருத்துக்கள் அவசியமான சிந்தனை
    thanks for sharin
    http://vaazgavalamudan.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Syed.

      நீக்கு
  2. நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும்... காலை 6 மணிக்கு குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்பி அவர்களைத் தயார் செய்து 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடும் குழந்தை இரவு ஏழுமணிக்கு வீட்டிற்குத் திரும்பி வருகிறதென்றால்... பள்ளியிலும், டியூஷனிலும், மற்ற கலைப்பயிற்சிகளிலும் விரும்பிப் படித்தாலும் விரும்பாமல் திணித்தாலும்....எப்படியாகிலும் அக்குழந்தை எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும்?

    unmai thaan

    கோபத்தில் அந்த மாணவன் ஏதோ கத்தியெடுத்து குத்தினான் என்றால் ....அதீத கோபத்தில் தன்னிலை தவறி கட்டுப்பாடிழந்து அத்தவறைச் செய்துவிட்டான் என்று கொள்ளலாம். ஆனால் இவன் ஆசிரியையை பதினான்கு முறை கத்தியால் குத்தி இருக்கிறான் என்றால்... எந்த அளவுக்கு அவனுக்கு கொடுமை / மன உளைச்சல் நிகழ்ந்திருக்குமென்று ஊகிக்க முடிகிறதல்லவா...? அதற்கு ஆசிரியை அம்மாணவனுக்குக் கொடுத்த தொடர்ந்த மனவுளைச்சலே காரணமாகிப்போனதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தொடர்ந்து பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கிவரச் சொல்லி ஆசிரியை கொடுத்த புகாரினால் பெற்றோர்கள் இவனை கண்டபடி திட்டுவதும் இதற்குக் காரணம் ஆசிரியைதானே என்று இவன் மனதில் ஆசிரியை ஒரு எதிரியாக மாறியதும் தான் நடந்திருக்கிறது....இதுவே சீறும் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்தும் விட்டது.

    kolai mattum avanathu nokkamendraal kazhuthil mattum ore oru kodu pottu kanakku mudithiruppan,,, appappa 14 times,,, romba yosikkavendiya vishayam ,, entha alavukku baathikka pattirukkiraan endru puriya mudigirathu.

    15 வயது இஸ்மாயில் வயதிலோ அறிவிலோ அனுபவத்திலோ முழுமை பெறாதவன். அவனால் ஒரு ஆசிரியரின் உயிர் பறிபோனது கொடூரச் செயலென்றால்... அதற்காக அம்மாணவனுக்கு மிகவும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் அது மற்ற மாணவர்களுக்குப் பாடமாக அமையுமென்று கூறுபவர்களே...

    அறிவிலும் அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்து பாடம் புகட்டக்கூடிய ஆசிரியர்களால் வாரந்தோறும் ஒரு மாணவனின் உயிர் பறிபோகிறதே.... இதற்கு என்ன தண்டனை தரப்போகிறது நமது அரசாங்கம்? இதை எப்படி தடுக்கப் போகிறது நம் சமூகம்?

    ivanaipola oru silarukku thandanai vaangithara vendi oolaiyidubavargal,, sila nooru aasiriyargalin thavarugalukkaaga ithe pol ooaliyittaargalaa?????????


    seithiyum, karuthukkalum arumai latha,, thanks for sharing

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி பாதுஷா!

      கடைசியில் இந்த கல்வி முறை ஒரு மாணவனை கொலைகாரனாக்கிவிட்டது தான் மிச்சம்!

      நீக்கு