என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

உணர்வுக் கிழிசல்கள்


உன் வார்த்தை வெட்டிய ரணக்குழிக்குள்
இன்னும் தத்தளித்துக்கொண்டே இருக்கிறது -
என் ரத்தநாளங்கள் பீச்சியடிக்கும் குருதிக்குள் உன்முகம்.

சின்னதான அந்த முத்த சப்தம் முடிவதற்குள்
கிழிந்து தொங்கிய முகத்திரைக்குள்
வேகமாக ஒளிகிறது உன்  நிதர்சன முகம்

உன் நினைவை மெல்ல மெல்ல விலக்கப்பார்த்தும்
தோற்றுக்கொண்டே  - 
சொட்டுசொட்டாய்  வடிந்து கொண்டிருக்கிறது கண்ணீர். 

விழுகின்ற ஒவ்வொரு ஒரு துளி கண்ணீரிலும்
உடைந்து சிதறுகிறது
வருடங்களாய்ச்  சேர்த்துவைத்த ஏக்கங்கள்

உள்மனதில்  கொந்தளித்துக் கிழியும்
உணர்வுக் கிழிசல்களுக்குள் நித்தமும்
முனகிக்கொண்டிருக்கிறது உனது குரல்.

ஓயாது உன்நினைவு -
என்னைச் சுற்றிக்கொண்டே தான்  இருக்கிறது
ஆனாலும் என்னைத் தொட அனுமதிப்பதில்லை - நான்

ஏதோ ஒரு காதல் ஜோடியைப் பார்த்தாலும்
ஒரு அசிங்கத்தைப் பார்ப்பதாகவே  நினைக்கிறேன் - காரணம் நீ!

உன்னதமான காதல் காவியங்களைப் படிக்கும்போதும்
உன் நினைவுதான் வருகிறது -
கிடைத்ததைத் தொலைத்து விட்டாயே பாவியென்று!

கண்ணடைத்துக் கொண்டே என்னால் பார்க்க முடிகிறது  ...


காரணமில்லாமல் நீ வைத்த முற்றுப் புள்ளியினால்
உன் மனசாட்சியின் ஒவ்வொரு அறையும்
நகக் கீறல்களால் நிரம்பிக்கொண்டே இருப்பதை!

துரோகத்தில் துய்த்து மகிழ்ந்த நொடிகளெல்லாம்
அமிலக் கொப்புளங்களாக -
உன் நெஞ்சமெங்கும் வெடித்துக்கொண்டே இருப்பதை!

உன் உடலெங்கும் உள்ள ஒவ்வொரு ரோமக்கால்களும்
என் உயிர்த்துடிப்பின் வேதனை சப்தத்தை
உனக்கு உணர்த்திக்கொண்டே இருப்பதை!

என் கற்பனையின் உச்சத்தில் தவறவிட்ட
அந்த நொடிப்பொழுதுகளின் நரக நிமிடங்கள் 
உன்னைத் தின்றுகொண்டே இருப்பதை!

வெடித்துச் சிதறும் உணர்வுகளை மதிக்காமல்
நொடிப்பொழுதில் மாறிய உன்னிடம்
மறுபடியும் கேட்கிறேன்....

எங்கேயடா புதைத்துவிட்டாய்  உன் மனசாட்சியை?

3 கருத்துகள்:

  1. அற்புதமான கவிதை உணராதவருக்கு புரிவதில்லை

    பதிலளிநீக்கு
  2. மனசாட்சி பற்றி உணராதவர்க்கு என்று சொல்லியிருக்கிறேன் கவிதை நன்றாகவே உணர்த்துகிறது

    பதிலளிநீக்கு
  3. உன் நினைவை மெல்ல மெல்ல விலக்கப்பார்த்தும்
    தோற்றுக்கொண்டே -
    சொட்டுசொட்டாய் வடிந்து கொண்டிருக்கிறது கண்ணீர்.


    என்ன ஒரு ஆழமான வரிகள், அருமை லதா,, மீண்டும் வாசிக்க தூண்டுகிறது ஒவ்வொரு வரிகளும்.,,,,,அழகு , அருமை, ஆழம்,

    பதிலளிநீக்கு