என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 19 டிசம்பர், 2012

21-12-12 ஐப் போல் முன்பொருநாள்...


35 வருடங்களுக்கு முன் ....அப்போது எனக்கு 7 அல்லது 8 வயதிருக்கும்.  இதே போலத்தான் நாளை உலகம் அழிந்துவிடும் என்று ஊரெல்லாம் புரளி பரவிக்கொண்டிருந்தது.

சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள் ரொம்பவே பயந்து விட்டோம். இப்போது போல் அன்றைய நாட்களில் தொலை பேசி வசதியோ, இன்டெர்னெட் e-mailலோ இல்லாத நாட்களது.  வீட்டிலிருந்து வேகமாக ஓடி நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று எல்லோரிடமும் அந்தப் பயங்கரமான செய்தியைப் பரப்பி எல்லோரையும் அலற வைத்து, இன்னும் பக்கத்து தெருவிற்கெல்லம் சென்று அங்குள்ள நண்பர்களோடெல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து அய்யையோ  நாளைக்கு உலகம் அழிஞ்சுடுமாமே.  உலகம் அழிஞ்சுடுச்சுன்னா என்ன பண்றது? நாமெல்லாம் செத்து போய்டுவோமாடா , நாளைல இருந்து நம்மால் எதும் விளையாட முடியாதாடா...என்று எல்லோரும் ஒரே அழுகை.


நாங்கள் எல்லோரும் எப்போதும் ஒன்றுசேர்ந்து விளையாடும் அந்தப் புளிய மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு உலகம் எப்படி அழியும்னு பாட்டிசொன்ன கதைகளும் சினிமாவில் பார்த்த கல்கி அவதாரம் பற்றியும் ஒவ்வொருத்தரும் ஓரோர் விதமான கருத்துக்களைச் சொல்லி மனசு பூரா பயமும் அழுகையுமாக ஆலோசித்துக் கொண்டிருந்தோம்.

சினிமாவில் பார்த்தது போல் ஒரு வேளை பயங்கரமான வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துக் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது? அதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போ... நாம எல்லோரும் இந்த புளிய மரத்துமேல ஏறி உட்கார்ந்துக்கலாம். அப்போ நம்மை வெள்ளம் வந்தாலும் அடிச்சுகிட்டு போகாது.  நாமெல்லாம் தப்பிச்சுடுவோம்னு  சொல்லிகிட்டிருக்கும்போதே   இன்னொருத்தன்... அதெல்லாம் முடியாது பயங்கரமா சூறைக்காத்து அடிச்சு மரமெல்லாம் கூட வேரோடு சாஞ்சி  விழுந்துடுமே அப்போ எப்படி தப்பிக்கறதுன்னு சொல்லி கொஞ்சம் ஆறுதலா இருந்த எல்லாரையும் மறுபடி பயமுறுத்தினான்.

உடனே அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு ....சரி  பெரியகோவில் கோபுரத்து மேல ஏறிகிட்டா  கோபுரம் சாயாதுடா வெள்ளமும் அடிச்சுட்டு போகமுடியாது நம்மைனு சொல்லி கொஞ்சம் சமாதான மூச்சுவிட அடுத்தவன் சொன்னான்.... இல்ல இல்ல ... உலகம் அழியும் போது பூமியெல்லாம் பாளம்பாளமா வெடிச்சுடும் அப்படியே கோயில் கோபுரங்கள் கூட அதுல உள்ள போய்டும் ... நாம  கோபுரத்துமேல இருந்தாகூட தப்பிக்க முடியாது... எல்லாரும் அப்படியே பூமிக்குள்ள போய்  அழுந்தி புதைஞ்சு செத்து போய்டுவோம்னு  சொல்றான்....

பயம் ... என்ன செய்யறதுன்னே தெரியலே. எல்லோரும் அழுதுகிட்டே இருக்கோம். என்னோட தம்பி , அக்கா, தங்கைகள்.. இன்னும் எங்க  பிரண்ட்ஸ்  எல்லோரும் சேர்ந்து  ஒரு முடிவெடுத்தோம்....

சரி எப்படியும் உலகம் அழியப்போகுது. அதுக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணு செய்வோம்னு சொல்லி... எங்களுக்கெல்லாம் தினமும் அப்பா பாக்கெட் மணி தருவார். செலவும் செய்வோம் . நிறைய சேர்த்தும் வைப்போம். அப்போ திடீர்னு தோணுச்சு  உலகம் அழிஞ்சு போச்சுன்னா...நாம எல்லோரும் செத்துபோய்ட்டா நாம சேர்த்து வச்சிருக்கற காசெல்லாம் வீணாதானே போகும். அதையெல்லாம் இன்னைக்கே செலவு செஞ்சுடுவோம்னு முடிவெடுத்து எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் எல்லாருடைய உண்டியலும் கொண்டுவந்து அந்தப் புளியமரத்தடியிலேயே  உட்கார்ந்து உண்டியலை உடைச்சு எல்லா காசையும் எடுத்துகிட்டு எங்க  தெருவில் இருக்கும் தாத்தா கடைக்கு(பெட்டி கடை) போய்  சோடா, கலர், பன்ன்னீர் சோடா , முருக்கு , தேன்மிட்டாய் , கம்மரகட்டு, போட்டி...இப்படி எங்களுக்குப் பிடிச்ச எல்லா அயிட்டத்தையும் வாங்கி வாங்கி சாப்பிடறோம்.  எத்தனை கலர்தான் குடிக்கறது.... ஒவ்வொருத்தரும் ரெண்டு மூணு  கலர்னு குடிக்கறோம் ... வயிறு எல்லாருக்கும் புல்லா ஆகி இனி இதுக்கு மேல எதுவும் சாப்பிட முடியாதுன்னு நிலைமை வந்துடுச்சி. அப்பவும் காசு மிச்சமா இருக்கு. அப்படியும் விடாம என்னன்னமொ வாங்கி  சாப்பிட்டு இருந்த காசையெல்லாம்  ஒரு வழியா காலி பண்ணிட்டோம்.

வீட்டுக்குப்  போக வேண்டிய நேரம் வந்துடுச்சி...  ரொம்ப வருத்தமா எல்லோரும்
டேய் ...  இன்னைக்கு ராத்திரி தூங்கினா  காலைல செத்துபோய்  இருப்போம்லனு சொல்லி சொல்லி.... அவ்ளோதான் இனி நாம யாரையும் பார்த்துக்க முடியாதுன்னு தேம்பித் தேம்பி அழுதுகிட்டே பிரிஞ்சோம்.

எப்படியோ பயத்தோடவே அந்த ராத்திரி தூங்கி இருக்கோம். அடுத்த நாள் காலைல....  அம்மா காபி போட்டுட்டு எங்களையெல்லாம் எழுப்பறாங்க.... சத்தம் கேட்டு கண்ணை திறந்து பார்த்தா சீக்கிரம் எழுந்துருங்க.... காபி குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்புங்கன்னு.... அம்மா குரல் கேட்குது ...எப்பவும் போல எல்லாமே நடக்குது....

ம்மா ...உலகம் அழியலியாம்மா... ன்னு கேட்டா... அடச்சீ...கழுத... உலகமாவது அழியறதாவது... எழுந்து ஒழுங்கா ரெடியாகிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு டைம் ஆகுது பார்ன்னு சொல்லிட்டு அம்மா சமையலறைக்குப் போய் எங்களோட டிபன் ரெடி பண்றதுல பிஸி ஆகிட்டாங்க....

எங்களுக்கோ ஒரே சந்தோஷம்.... ஹைய்யா... உலகம் அழியலே உலகம் அழியலேன்னு என்னோட தம்பி தங்கச்சியையெல்லாம் கட்டி பிடிச்சுகிட்டு ஒரே சந்தோஷமா சத்தம் போடறோம்...

ஆனா எங்களுக்கெல்லாம் உலகம் அழியலேங்கற  சந்தோஷத்தவிட நாளைக்கு உலகம் அழிஞ்சிடும்னு யாரோ சொன்னதை நம்பி சேர்த்து வச்ச காசையெல்லாம் கலர் கலரா வாங்கி குடிச்சு செலவு பண்ணிட்டோமேங்கற  வருத்தம்தான் ரொம்ப அதிகமா இருந்தது...

அந்த பழையநாள் போலவே இன்னும் ஒருநாள் இப்போது ....21.12.12

உலகம் என்பது மாயை ... மாயா காலண்டரும் அது போல் இன்னொரு மாயை... அவ்ளோதான்....

சாதாரண வாட்ச் போலத்தான் அந்த மாயன் கடிகாரமும் .  அந்த பிரம்மாண்ட கடிகாரம் 21.12.12  அன்று முடிவடைந்தால்  ... reset  பண்ண முடிந்தால் மறுபடி  ஆரம்பத்துல இருந்து ஓடப்போகுது. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

(எங்களைப் போலவே எந்த சின்னப்பசங்க எங்கெல்லாம் பயந்துகிட்டிருக்காங்களோ.... பாவம்... அவங்கள்ள   யாரோ  ஒருத்தர் என்னைப் போலவே இதே போல ஒரு அனுபவத்தை சில வருடங்கள் குறித்து எழுதக்கூடும்....  எனென்றால் இதுபோன்ற புரளி அடிக்கடி வந்துகொண்டுதானே  இருக்கிறது.)

(21.12.12 ...மாயன் காலண்டர் பற்றி என்னுடைய தம்பியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் எனக்கு நியாபகப் படுத்தினான்... உண்டியலை உடைச்சு எவ்ளோ கலர் குடிச்சோமே நியாபகம் இருக்கா லதான்னு சொல்லி சிரித்தான்.... அதை இங்கே பகிர்ந்தேன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக